Falls

Falls
5 Falls

புதன், 12 நவம்பர், 2014

தமிழில் லீன் - முன்னுரிமை


முன்னுரிமை 



ஒரு வேலையை இப்போ செய்யறது சரியா ?

இல்லே கொஞ்ச நேரம் கழிச்சு செய்யலாமா ?

கொஞ்ச நாள் கழிச்சு செய்யலாமா ?

அடுத்த மாசம் செய்யலாமா ?

இல்லே அடுத்த வருஷத்துக்குத் தள்ளிப் போடலாமா ?

இரண்டு முக்கிய வேலைகள் இருக்கும் போது எதை முதலில் முடிக்கலாம் ?

ஏராளமான செலவுகள் இருக்கும் போது எதை முதலில் செய்யலாம்.

அந்த வேலையோட பலன் எவ்வளவு சீக்கிரமாத் தேவைப்படும்னு பார்க்கலாம். அல்லது எது அதிக நேரம் பிடிக்குமோ அதை முதலில் செய்யலாம். அல்லது எந்த வேலைக்கு அதிக திட்டமிடல், உழைப்பு தேவைப் படுமோ, அதிக சிக்கலான நடவடிக்கைகளைக் கொண்ட வேலைகளை முதலில் தொடங்கலாம்.

உதாரணத்துக்கு எலக்டிரிக் பில் கட்டறது எடுத்துக்கலாம். கடைசி நாள் வரைக்கும் இழுக்க வேண்டாம். அதே சமயம் ரீடிங் எடுத்ததும் ஓடிப்போய்க் கட்ட வேண்டியதும் இல்லை.

இப்போ வர்ர மூவாயிரம் நாலாயிரம் தொகையெல்லாம் பதினைந்து நாள் பாங்க் அக்கவுண்ட்லே இருந்தாக் கூட ஒரு சின்ன வட்டி வரும். இப்போதான் நாள் கணக்குலயே பாங்க் வட்டி வருதே.

அதிலும் கடை, கம்பெனி, தொழிற்சாலைகள்லேயெல்லாம் கடைசி நாள்லே அல்லது அதுக்கு முந்தின நாள்லே கொண்டு கட்றதுதான் லாபம். அந்தப் பணத்தையே ஒர்க்கிங் கேப்பிடலா ரொட்டேஷன் பண்ணி லாபம் சம்பாதிக்கலாம்.

ஆனா சில பேருக்கு இதெல்லாம் பிடிக்காது.

இந்த மாதிரி முடிவுகளெல்லாம் எடுக்கறதுக்கு மன மாற்றம் மிகவும் அவசியம். அதாவது மைண்ட செட்.



என் மனைவிக்கெல்லாம் வேலையைத் தள்ளிப் போடறது பிடிக்காது. முடிக்கற வரைக்கும் அதை ஏதோ தலை மேலே சுமந்துக்கிட்டே அலையற மாதிரி நினைச்சுப்பாங்க. திரும்பத் திரும்ப அதையே சொல்லலிட்டு கவலைப் படுவாங்க. எலக்டிரிக் பில் கட்டணும் . . . எலக்டிரிக் பில் கட்டணும். மறந்துடக் கூடாது . . . . காசு காலியாயிடப் போகுது. சீக்கிரம். அப்பிடின்னு சொலிட்டே இருப்பாங்க.


வீட்டிலேயெல்லாம் பணம் கைல இருந்தா எப்பவுமே நல்லது. எலக்டிரிக் பில் பணத்தை ரிசர்வ்ல வைக்கலாம். பொறுமையா  கட்டலாம். இடைல ஏதாவது அவசர செலவு வந்தா நம்ம பணத்தையே எடுத்துக்கலாம். திருப்பி வச்சுக்கலாம்.

இல்லேன்னா கைல இருந்த பணத்தை இந்த மாதிரி  முன்னுரிமை இல்லாத வகைலே செலவு பண்ணிட்டு அவசர செலவுக்கு, உதாரணத்துக்கு ஒரு மருத்துவச் செலவுக்கு, ஓடிக்கிட்டிருப்போம்.

அதாவது . . . . . . பொறுமையாஅடுத்த மாசம் செய்யலாம் அப்பிடின்னா அதை இப்பவே முடிக்கறது . . . . .

வேஸ்ட்.

இதைத்தான் தகுந்த நேரத்திற்குச் செய்தல் என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் ஜஸ்ட் இன் டைம் (Just in time).

என்ன ? இது ஒரு பெரிய விஷயமா என்கிறீர்களா ? இது கேட்பதற்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் இதை மிகவும் கட்டுப் பாடாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் டொயட்டோ, டெல் போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் கழிவுகளையெல்லாம் குறைச்சு அபாரமான லாபத்தை சம்பாதிச்சுக்கிட்டிருக்காங்க.

இவங்களைப் பொறுத்தவரைக்கும் தேவைக்கு முன்னாடியே அதிகப் படியாகத் தயாரிச்சு வைக்கற பொருட்கள் எல்லாமே வேஸ்ட்தான்.

விலை அதிகமான, கார், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் ஆர்டரின் பேரில் மட்டுமே தயாரிக்கலாம். வேகமாக விற்பனையாகும் ஒரு சில மாடல்கள் மட்டும் விதி விலக்கு. ஒரு குறிப்பிட்ட மாடல் மாதத்திற்கு 100 விற்பனையாகும் என்று கணிக்கப் பட்டால் மொத்தமாக 100 தயாரிக்கலாம்.

இதைப் பின்பற்றhத ஒரு தொழிற்சாலைலே என்ன நடக்க வாய்ப்பு இருக்குன்னு பார்க்கலாமா ?

அதிகமா உற்பத்தி பண்ணிப் போட்டாச்சு. இன்னும் அதெல்லாம் வியாபாரமாகலே. இந்த நேரத்துல புதுசா வேறே ஒரு மாடல் பொருளுக்கு ஆர்டர் கிடைச்சுதுன்னு வச்சுக்கலாம்.

இப்போ யோசிச்சுப் பாருங்க. ஏராளமான மூலப் பொருள், பணம் எல்லாம் பொருளா மாறி முடங்கிக் கிடக்கும் போது, நாளைக்கே தேவைப் படற உற்பத்திக்கு எல்லாப் பொருளுமே மறுபடியும் தேவைப்படுகிறது.

தொழிற் சாலைகளில் தேவையான, அதாவது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகத் தேவைப்படும், பொருட்களை மட்டும் தயாரியுங்கள்.

வீட்டில் செலவை மிகவும் தேவையான நேரத்தில் செய்யுங்கள்.

ஒரு பொருளைத் தேவையான நேரத்தில் மட்டும் வாங்குங்கள். நாளைக்குத் தேவைப் படலாம் என்று வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றhல் அது பயன் படாமலே கூடப் போகலாம். அல்லது வீணாகப் போகலாம்.

எலக்ட்ரானிக் பொருட்களெல்லாம் யோசித்து தேவையான போது மட்டுமே வாங்குங்கள். இதை விடச் சிறந்த மாடல் இதைவிடக் குறைந்த விலையில் கிடைக்கலாம் இல்லையா ?

நண்பர் ஒருவர் ஒரு எல்இடி டிவியை வெளிநாட்டிலிருந்து இரண்டு வருஷங்களுக்கு முன்பே வாங்கிக் கொண்டு வந்து விட்டார். விலை ஒரு லட்சத்துக்கும் மேல. புது வீடு முழுசாக வேலை முடியவில்லை. மறுபடியும் வெளிநாடு போகவேண்டிய நிலை. இப்போது அவருடைய புதிய வீடு தயார். ஆனால் அவருடைய டிவி இப்போது இரண்டு வருஷம் பழசு. ஊபயோகப் படுத்தாமலே இரண்டு வருஷ வாரண்டி போச்சு. சரியா வேலை செய்யலேன்னு சர்வீசுக்குப் போனால் ஸ்பேர்ஸ் கிடைக்கவில்லை.

அது மட்டுமில்லை. இப்போது அதைவிட அதிக வசதிகள் உள்ள டிவி குறைந்த விலையில் இங்கேயே கிடைக்கிறது.

ஆக. முன்னுரிமை என்பது ஓரளவிற்குப் புரிகிறதா ?

சார் . . . . இந்த குறிக்கோள் . . . . முன்னுரிமை . . . . .  அப்பிடின்னு பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம இதுதான் கழிவு . . . . அது தேவையில்லை சுத்;தமா கட் பண்ணு இல்லைன்னா கொஞ்சம் குறைச்சுக்கோ . . அப்பிடின்னு சொல்ல முடியுமான்னு பாருங்க. . . . என்கிறீர்களா ?

முந்தைய அத்தியாயங்கள்ல சொன்னதெல்லாம் உங்களுக்கு ஒரு மாதிரி தௌpவாத் தெரிஞ்சுக்கத்தான்.

மற்றபடி லீன் முறையிலே ஏழு நடவடிக்கைகளை கண்டிப்பாக் கழிவுதான்னு சொல்லி வச்சிருக்காங்க.

 1.    போக்குவரத்து            -    Transport
2.    அதிகப் படியாகச் சேர்த்து வைக்கப் படும் பொருட்கள்    -    Over-stock
3.    தேடுதல், தேவையற்ற நகர்வு        -    Motion
4.    காத்திருத்தல்            -    Waiting
5.    அதிகப் படியான உற்பத்தி        -    Over-production
6.    தேவைக்கு அதிகமாக ஒரு செயலை மீண்டும் செய்தல்     -    Over-processing
7.    நிராகாpக்கப்படும் பொருட்கள்    -    Defect / rework

தொடரலாம்

திங்கள், 10 நவம்பர், 2014

தமிழில் லீன் - கழிவுகளை எப்படி நெறிப்படுத்துவது ?

கழிவுகளை எப்படி நெறிப்படுத்துவது ?


வகை ஒன்று        -    முற்றிலுமாக நீக்க முடியாது. நெறிப்படுத்தி ஆகுற நேரத்தைஇ செலவைக் கொஞ்சம் குறைக்கப் பாக்கலாம்

வகை இரண்டு    -    முற்றிலுமாக நீக்க முடியும். துடைத்தெறிய வேண்டியது
முதலில் வகை ஒன்றை எப்படிக் கையாள்வது என்று பார்க்கலாம். அதாவது தவிர்க்க முடியாத சில வேலைகளை எப்படி நெறிப்படுத்துவது டூ


1.    மற்ற நாட்கள்ள பொறுமையா குளிக்கலாம். இப்போ காலைக்கடன் வேலைகளுக்கான நேரத்தை அரை மணியாகக் குறைக்கலாமே.

2.    அறைல டீ போடற அளவுக்கு (சில சமயம் ஒரு சின்ன சமையல்) ஒரு கிச்சன் செட்டப் செய்யலாம். அட்லீஸ்ட் கடைக்கு நடக்குற நேரம் மிச்சம். சமயத்துல நண்பர்களைப் பார்த்து வெட்டி அரட்டை அடிக்கிற நேரமும் மிஞ்சும்.

3.    காலைலே ரெடிமேடாக் கிடைக்கிற இட்லிஇ பூரி வகையறhக்களைத் தேர்வு செய்யலாம். காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. (ரெடிமேட்தானேன்னு பொங்கல் பக்கம் போயிடாதீங்க. அப்புறம் பிற்பகல் தூக்கத்தோட முற்பகல் தூக்கமும் சேர்ந்து இன்னொரு வேஸ்டுக்கு வழி பண்ணிடும்). உங்களுக்குப் பிடித்த தோசை ஐட்டங்களை எக்ஸhம் முடிஞ்ச பிறகு ஒரு நாள் சாவாகாசமாக ஒரு கட்டு கட்டலாம்.

4.    டின்னருக்கு பிரட் ஆம்லேட் நுடுல்ஸ் சின்னதா ஒரு உப்புமா என்று அறையிலேயே முடித்துக் கொள்ளலாம். நடை காத்திருப்பு எல்லாமே மிச்சம்.

5.    அல்லது உங்கள் நண்பரைப் போல நீங்களும் ஸ்டடி லீவுக்கு ஊருக்குப் போய்விடலாம். எம்புள்ள பரிட்சைக்குப் படிக்கான் அப்பிடின்னு எல்லாம் உங்க மேசைக்கே வந்து விடும். இந்த வகையில் ஊருக்குப் போன நண்பர்தான் நேரத்தை அதிகபட்சமாக குறிக்கோளுக்குச் செலவிடுகிறhர்.

அடுத்ததாக வகை இரண்டு. அதாவது சுத்தமாக வெட்டி எறிய வேண்டிய செயல்பாடுகளை செய்யவே கூடாது.

1.    மதியத் தூக்கம்    -    ஸ்டடி லீவில் கண்டிப்பாகத் தேவையில்லை. அதெல்லாம் இல்லை. நான் ராத்திரி அமைதியான நேரத்துல கூடுதலா இரண்டு மணிநேரம் படிப்பேன் என்பவர்களுக்கு இது விதி விலக்கு.

2.    நண்பர்களுடன் அரட்டை    -    கிளாஸ்லே அடிச்ச அரட்டையல்லாம் போதாதா டூ ஸ்டடி லீவுலயாவது அதை ஓரமாத் தள்ளி வையுங்க.

3.    நண்பருடைய கால் டூ இப்ப படிக்குற சப்ஜெக்ட் சம்பந்தமா பேசினா மட்டும் தொடரலாம் வேறே சப்ஜெக்டா இருந்தாக் கூட அது இன்றைய குறிக்கோளுக்கு எதிராத்தான் இருக்கும். எனவே . . . கட்.

இதிலிருந்து என்ன கற்றுக் கொண்டோம் ?

குறிக்கோளை முன்னிருத்தி எப்படிக் கழிவுகளை அடையாளம் காண்பது என்று கற்றுக் கொண்டோம்.


அடுத்த பாயின்ட் முன்னுரிமை.

முன்னுரிமையைக் கொண்டு எப்படிக் கழிவுகளை இனம் கண்டுபிடிப்பது ?

தொடர்ந்து படிக்கலாம்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தமிழில் லீன் - கழிவுகளை எப்படி வகைப்படுத்துவது ?

கழிவுகளை எப்படி வகைப்படுத்துவது ?




பொருட்களின் மதிப்புக் கூட்டாத எந்தவொரு நடவடிக்கையும் கழிவுதான் என்று முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

சில வகைக் கழிவுகளை நாம் முற்றிலுமாக நீக்க முடியும். அந்த வகைக் கழிவுகளை இரண்டாம் வகைக் கழிவு (Type 2 waste) எனலாம்.

சிலவற்றை நம்மால் முற்றிலுமாக நீக்க முடியாது. அந்த வகைக் கழிவுகளை முதல் வகைக் கழிவு (Type 1 waste) எனலாம்.

கழிவுகளை அடையாளம் காண்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்முடைய தொழில் பற்றிய ஆழமான புரிதலும் தௌpய அறிவும் வேண்டும்.

ஓவ்வொரு பாயின்டாகச் சற்று விரிவாகப் பேசலாமா ?

1.    குறிக்கோள் சார்ந்த நடவடிக்கைகள்

நாம் குறிக்கோள் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பார்த்து விட்டோம். குறிக்கோளுக்கும் லீன் போன்ற தரக் கொள்கைகளுக்கும் என்ன சம்பந்தம் ?

தௌpவான குறிக்கோள் எப்போதுமே தௌpவான திட்டத்தைக் கொடுக்கும்.

வழக்கம் போல ஒரு உதாரணத்தோடு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நம் நண்பருடைய குறிக்கோளுக்கு வருவோம்.

எப்பிடியோ . . . நாலு வருக்ஷத்துக்குள்ள இந்த டிகிரிய 70 சதவீதத்துக்கு மேல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடணும்டா.

இப்போது இன்னும் ஒரு மாதத்தில் எக்ஸம். ஸ்டடி லீவ் ஆரம்பமாகி விட்டது. நண்பர் திட்டமிடுகிறhர்.

30 நாள். 6 சப்ஜெக்ட்.

ஒரு சப்ஜெக்டுக்கு 5 நாட்கள்.

ஒரு சப்ஜெக்டில 5 யூனிட்.

ஆக ஒரு நாள்ல ஒரு யூனிட். அருமை. 70 மார்க் வாங்கறது ஒண்ணும் பெரிய கஷ்டமே இல்லே போலிருக்கே.

இப்போது நண்பருடைய ஒரு நாளைக்கான குறுகிய காலக்குறிக்கோள், ஒரு நாளில் ஒரு பாடத்தில் ஒரு பகுதியை முடிப்பதுதான். சரிதானே ?

இப்போது அவர் திட்டத்தை எப்படி நடைமுறைப் படுத்தறhர்னு பார்க்கலாம்.

கொஞ்சம் போரடிக்கும். இப்பிடியெல்லாமா எழுதணும்னு சிரிப்பாக் கூட இருக்கும். ஆனால் கழிவுகளைத் துல்லியமாக் கண்டு பிடிக்க இந்த அளவுக்கு ஆராய்ச்சி அவசியம்தான்.

1.    காலை 6 மணிக்கு எழுந்திரித்தல். அதாவது அவருடைய நாள் 6 மணிக்குத் தொடங்குகிறது.

2.    காலைக் கடன் முடித்து, பல் விளக்கி முடிக்க 6 30.

3.    வாய் ஒரு காபி கேட்கிறது. பக்கத்துக் கடையில் போய் ஒரு காபி குடித்து விட்டு வருகிறhர்.

4.    வந்து குளித்து முடிக்க மணி 7 30 ஆகிறது.

5.    மெஸ்ஸிற்கு 10 நிமிஷம் நடந்து சென்று காலை டிபனுக்கு தோசை சொல்லி விட்டுக் காத்திருக்கிறhர்.

6.    8 மணிக்கு டிபன் வர 8 15 க்கு டிபன் முடித்து மறுபடியும் நடந்து அறைக்கு வந்து 5 நிமிஷம் ரெஸ்ட். இப்போது மணி 8 30.

7.    10 30 மணிவரை படிப்பு. அரை மணிநேரம் ரெஸ்ட். ரெஸ்டுக்கு இடையில் ஒரு டீ. அதாவது கடைக்கு நடந்து போய் டீ குடித்துவிட்டு வருகிறhர்.

8.    11 க்கு உட்கார்ந்து 1 மணி வரைக்கும் படிப்பு.

9.    மதியச் சாப்பாடுக்கு மெஸ்ஸிற்குச் சென்று சாப்பிட்டு விட்டு மறுபடியும் அறைக்கு வருகை.

10.    உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று நியாயப் படுத்திக் கொண்டு 2 மணி நேரம் தூக்கம். இப்போது மணி 4 30.

11.    சுடச்சுட ஒரு டீயைப் போட்டுட்டு படிக்க உட்காரலாம் என்று மீண்டும் கடை.

12.    வேறு சில நண்பர்களும் அங்கே இருக்கிறhர்கள். பாடத்தில் தொடங்கி வரப் போகும் படம் வரை ஒரு சிறு அரட்டை. மணி 5 30.

13.    அறைக்கு வந்து சேரவும் ஸ்டடி லீவிற்கு ஊருக்குப் போன ஒரு நண்பர் போன் செய்கிறhர். அவர் படிக்கிற பாடம் அதில் வந்த சந்தேகம் பற்றி பேசிவிட்டு முடிக்கவும் மணி 6.

14.    உட்கார்ந்து 8 30 வரை படிக்கிறhர்.

15.    மெஸ்ஸிற்க்குப் போய் டின்னர். திரும்பி வரும்போது மணி 9 30.

16.    இரண்டு மணி நேரம் படித்து முடிக்கிறhர். மணி 11 30.

17.    தூக்கம் கண்ணைச் சுற்ற படுக்கையைப் போடுகிறhர்.

18.    முடிவில் படித்து முடிக்க வேண்டிய பாடத்தில் இன்னும் நான்கு சிறு பகுதிகள் மீதமிருக்கின்றன.

19.    அதற்கென்ன.. நாளைக்கு அதை முடித்து விட்டுப் பிறகு அடுத்த யூனிட்டைத் தொடங்க வேண்டியதுதான்.

ஆக நம்முடைய நண்பர் இன்றைய குறிக்கோளை அடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம். இதை அவர் (நாமும்) ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

என்ன காரணம் ?

மேலே பட்டியலிட்ட நடவடிக்கைத் தொடரில் என்ன பிரச்சனை ?  

சற்று ஆராயலாமா ? வாருங்கள்.

இன்றைய குறிக்கோள் என்ன ? ஒரு பாடத்தில் ஒரு யூனிட்டை படித்து முடிக்க வேண்டும்.

இதற்குப் பங்களிக்காத செயல்பாடுகளைக் கொஞ்சம் பார்க்கலாமா ?

1.    ஆறு மணி வரை தூக்கம்.

2.    ஏழரை வரை காலை நேர வேலைகளுக்கு ஒதுக்கீடு

3.    டிபனுக்கு நடந்து சென்று, தோசைக்காகக் காத்திருந்து சாப்பிடுதல்

4.    முற்பகல் டீ.

5.    மதியச் சாப்பாட்டுக்காக மறுபடியும் ஒரு நடை.

6.    பிற்பகல் தூக்கம்

7.    மாலை டீ மற்றும் டீ சார்ந்த அரட்டை

8.    நண்பருடைய போன் கால்

9.    இரவு உணவுக்கான க(ந)டைப் பயணம்.

இவை எல்லாமே குறிக்கோளுக்கு நேரடியாகப் பங்களிக்காத செயல்கள்.

அப்படியானால் வேஸ்ட்டா ?

என்ன பாஸ் ? பல் விளக்குறது பாத்ரும் போறதெல்லாம் வேஸ்ட்டா ?

பிற்பகல் தூக்கம் வேஸ்ட்தான். ஆனா சாப்பிடறது அதுக்கு நடக்கறதெல்லாம் கூடவா வேஸ்ட் ?

உங்க குறிக்கோள் ஒரு யூனிட்டைப் படிச்சு முடிக்கறதுன்னா மத்ததெல்லாம் கண்டிப்பா வேஸ்ட்தான். அதாவது குறிக்கோளைக் கொண்டு நாம் கழிவுகளை அடையாளப் படுத்த முயற்சிக்கிறேhம்.
என்ன ஒண்ணு. அந்த வேஸ்டை நாம ஒளவையார் மாதிரி வகை ஒன்று வகை இரண்டுன்னு வகைப்படுத்திக்கலாம்.

வகை ஒன்று      

-    முற்றிலுமாக நீக்க முடியாது. நெறிப்படுத்தி ஆகுற           நேரத்தை, செலவைக் கொஞ்சம் குறைக்கப் பாக்கலாம்

வகை இரண்டு   

-    முற்றிலுமாக நீக்க முடியும். துடைத்தெறிய வேண்டியது
முதலில் வகை ஒன்றை எப்படிக் கையாள்வது என்று பார்க்கலாம்.

அதாவது தவிர்க்க முடியாத சில வேலைகளை எப்படி நெறிப்படுத்துவது ?

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழில் லீன் தத்துவம் - 3 - மதிப்புக்கூட்டும் நடவடிக்கைகள் மற்றும் மதிப்புக் கூட்டா நடவடிக்கைகள்

மதிப்புக்கூட்டுறதுன்னா என்ன ?

ஒரு பொருளோட விலை மதிப்பு எதனால அதிகமாகுது ? அந்த அதிகப்படியான விலையை நீங்க முழு மனசோட குடுப்பீங்களா ?

இந்த பேச்சு வார்த்தைகளைக் கொஞ்சம் கவனிங்க.

=========================================================================

பூ எவ்வளவுங்க ?

உதிரிப்பூ 100 கிராம் முப்பது ரூபாய் ? கட்டுனது முழம் இருபது ரூபாய். உங்களுக்கு எப்பிடிம்மா வேணும் ?

அப்போ 200 கிராம் கட்டுனா முணு முழம் வருமா ?

என்னம்மா . . . இது என்ன பெருக்கல் கணக்குப் போட்டுப் பண்ணுற வியாபாரமா ? கட்ற கூலி போக்கு வரத்து செலவெல்லாம் வேணுமுங்களே.

=========================================================================

உளுந்தம் பருப்பு எங்க இருக்குதுங்க ? கிலோ என்ன விலை ?

எண்பத்தஞ்சு ரூபாய். அரை கிலோ பாக்கட் கூட இருக்குது மேடம். எத்தனை பாக்கட் வேணும் ?

என்னப்பா இது . . . கடைல எழுபத்தேழுக்கு இருக்கே. பாக்கட் போட்டு ஏஸி ஹhல்லே வச்சுட்டு எட்டு ரூபாய் ஏத்தறீங்களே.

இல்லே மேடம். கடையை விட இது நல்லா இருக்கும். பாலிஷ் பண்ணி, சுத்தப் படுத்தி பாக்கட் போட்டு வச்சிருக்கோம். நல்ல நயம் பருப்பு மேடம்.

சுத்தப்படுத்தறது சரி. ஆனா பாலிஷ் போடறதும் பாக்கெட்ல போடறதும் எங்களுக்கு என்ன பிரயோஜனம். பளபளன்னு பார்க்க அழகா இருக்கும். வேகவச்ச பிறகு எல்லாமே ஒண்ணுதானே.

=========================================================================

காய்கறி விலையெல்லாம் பாத்தீங்களா ?

என்ன பண்றது ? வாங்கித்தானே ஆகணும்.

போற போக்கப் பார்த்தா தோட்டத்திலேயேதான் போய் வாங்கணும் போலிருக்கு. அப்பதான் ஓரளவுக்கு வாங்கற மாதிரி விலை இருக்கும் போல.

அது சரிதான். இந்த லாரி டிரான்ஸ்போர்ட் செலவாலேதான் விலையெல்லாம் ஏறுது. போறரததுக்கு ஏஜெண்ட் கமிஷன், கோடோன் வாடகைன்னு, ஏத்தற கூலி, இறக்குற கூலின்னு வேறே. ஆனா பாத்தீங்கன்னா தோட்டத்துல கிடைக்கிற அதே காய்கறிதான் . . . அதே ருசிதான். சொல்லப் போனா தோட்டத்துல இன்னும் பிரஷ்ஷhவே கிடைக்கும்.

அது சரி. அதுக்காக ஒரு கிலோ கத்தரிக்காய்க்காக பக்கத்து கிராமத்து தோட்டத்துக்கா போகமுடியும் ? இல்லே சென்னைல காய்கறித்தோட்டம்தான் போடமுடியுமா ?

 =========================================================================

என்ன சார். பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் நடவடிக்கைன்னா என்னன்னு லேசா புரியற மாதிரி இருக்குதா ?

இந்தப் பூ கதையைப் பாருங்க. உதிரிப்பூ பூமாலையாவோ பூச்சரமாவோ ஆகுது. அதாவது கச்சாப் பொருள் உபயோகப் படற ஒரு பொருளா மாறுது. அதோட விலை மதிப்பு ஏறலாம். நாமளும் சந்தோஷமா அதற்கான விலையைக் கொடுக்கலாம்.

ஆனா இந்தப் பருப்பு ? பாலிஷ் போடறது வெறும் அலங்காரம். பாக்கெட் போடறது வியாபாரிக்கு மிச்சம். நிறுக்க வேண்டியதில்லை. கட்ட வேண்டியதில்லை. போக்குவரத்திலே சேதமாகறதில்லை. சிந்தாம சிதறhம கோடோன்லே இருந்து கஸ்டமர் வீட்டு வரைக்கும் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடும். ஆனா இது அத்தனைக்கான செலவும் பருப்போட விலைலதான் ஏறும்.

பூ வியாபாரத்திலே பொருளோட மதிப்பைக் கூட்டற நடவடிக்கைகள் இருக்கு.

ஆனா பருப்பிலே ?  . . . நாம எல்லாரோட வசதிக்காகவும் சில வேலைகள் செஞ்சாலும் அது பருப்போட தரத்தையோ மதிப்பையோ கூட்டப் போறதில்லை. ஆனா நாம அந்த செலவையும் பருப்போட விலையோட குடுக்கத்தான் வேண்டும்.

ஆக . . . கச்சாப் பொருளைக் கொஞ்சமாவது உறுமாற்றமோ அல்லது குணநலனில் மாற்றமோ செய்யக் கூடிய நடவடிக்கைதான் மதிப்பு கூட்டும் நடவடிக்கை.

அப்படிச் செய்யாத எந்த நடவடிக்கையுமே மதிப்புக் கூட்டும் நடவடிக்கை இல்லை. அது மட்டுமில்லை. இப்படிப் பட்ட மதிப்பு கூட்டாத நடவடிக்கைகளை உற்பத்தித் துறையில் ஒரு பெயர் கொண்டு அழைக்கிறhர்கள்.

வேஸ்ட். . . . . அதாவது . . .  கழிவு . . . . . . தவிர்க்கப் படவேண்டிய நடவடிக்கை. அல்லது  குறைக்கப் படவேண்டிய நடவடிக்கை.

இப்படிப் பட்ட நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்கவோ குறைக்கவோ முயற்சிப்பதுதான்  . . . . . நம்முடைய பாடத்திட்டத்தோட நோக்கம்.

அப்புறம் அந்தக் காய்கறி வியாபாரம் பத்தி ஒண்ணுமே சொல்லலியே ?

பின்னாலே உபயோகமா இருக்கும்னு இப்போ லேசா ஆரம்பிச்சு வச்சேன். மறுபடியும் வேறே சில விஷயங்களைப் புரிஞ்சுக்கறதுக்கு கண்டிப்பாத் தேவைப் படும். அப்போ பாக்கலாம். சரிதானே ?

(இன்னும் வரும்)
 

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

குறிக்கோளும் அதைச் சரியாக வரையறுத்தலும் - தமிழில் லீன் தத்துவம் - 2

உங்களோட குறிக்கோள் என்னங்க ?

உங்கள் நண்பர்கள், உறவினர்கள், கூட வேலை செய்பவர்கள், பஸ்ஸில் பக்கத்து சீட்டுக் காரர், அடுத்த வீட்டு மாமா என்று சிலரிடம் கேட்டுப் பாருங்கள்.

எப்பிடியாவது இந்த ஊர்ல ஒரு வீடு வாங்கிடணும்பா.

இந்த டிகிரியை முடிச்சாப் போதுங்க. எங்கப்பா பாடுற ராமாயணத்திலேயிருந்து தப்பிச்சுடுவேன்.

முதல்லே ஒரு நல்ல வேலைக்குப் போகணும் சார். இப்போ பாக்குறதெல்லாம் ஒரு வேலையா ? நாய்ப் பொழப்பு.

என்னங்க பொல்லாத குறிக்கோள். நாமளோடது என்ன பெரிய லட்சிய வாழ்க்கையா ? தினசரி பொழப்பை ஓட்டினாப் போதாதா ?

லட்சிய வாழ்க்கைக்குத்தான் குறிக்கோள் தேவையா ? ஏன் ? நமக்கெல்லாம் தேவையில்லையா ?

நம்மில் பலருக்கு குறிக்கோள் என்ற வார்த்தையில் குழப்பம் இருக்கிறது;. குறிக்கோள் என்பது தேவைதானா என்பதிலேயே சிலருக்குச் சந்தேகம்.

வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் இருப்பது என்பது எதற்குச் சமம் தெரியுமா ?

எங்கே போகவேண்டும் என்று முடிவு செய்யாமலே பஸ் ஸ்டாண்டில் நிற்பதற்குச் சமம்.

எங்கே போகணும்னே தெரியாமல் எப்படி ஒரு பஸ்ஸில் ஏறுவது ? எந்த பஸ்ஸில் ஏறுவது கிழக்கே போற பஸ் ? இல்லே மேற்கே போறதா ?

எந்த ஊர் வண்டியைப் புடிக்கணும் ? எங்கே இறங்கணும் ?

பஸ்ஸில் போக முடியுமா ? இல்லை ரயிலைத்தான் பிடிக்கணுமா ?

எங்கே போகவேண்டும் என்று முடிவு செய்தால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இல்லையா ?

போக வேண்டியது அமெரிக்கா என்னும் போது பஸ்சோ ரயிலோ வேலைக்காகாது. பிளைட்தான் பிடிக்கவேண்டும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

யாருங்க அது . . . . செவ்வாய் கிரகம்கிறது . . . . கிரகம்தான் . . . . உங்களுக்கும் ஒரு பதில் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்.

சரிப்பா . . . . உன் பிரச்சனை என்ன ? நான் எங்க போறேன்னு தெரியணும். அதானே. திருச்சிக்குப் போய்ச் சேரணும்;. இப்போ நான் பஸ்ஸைப் புடிக்கலாமா ?

கொஞ்சம் பொறுங்க சார். இன்னும் சில மேட்டர்ஸ் இருக்கு.

திருச்சிக்கு எத்தனை மணிக்குள்ள போய்ச் சேரணும் ?   பத்து மணிக்கா ? சரி.

திருச்சில குறிப்பா எங்கே ? திருவரம்பூரா ? நல்லது.

இப்போ எந்த வண்டியப் புடிச்சா திருச்சிக்கு அதுவும் திருவரம்பூருக்கு காலைல பத்து மணிக்குள்ள போறது சாத்தியம் ?

இப்பிடி சில கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரிஞ்சாத்தான் அது முழுமையான குறிக்கோள்.

இப்போ சொல்லுங்க. திருச்சில காலைல பத்து மணிக்கு இண்டர்வியூ. நீங்க பன்னிரண்டு மணிக்குப் போனா என்ன பிரயோஜனம் ?

திருச்சிக்கு ஆட்டோலதான் போவேன்னு அடம் புடிச்சா அது நடைமுறைக்கு சாத்தியமா ?

சரி. அப்போ சரியான முழுமையான குறிக்கோள் எப்படித்தான் இருக்குமையா என்று நீங்கள் கேட்பது சரிதான்.

அதற்கும் ஒரு வழி இருக்கிறது.
இதைத்தான் மனிதவள வல்லுனர்கள் S M A R T குறிக்கோள் என்பார்கள்.


S          -           Specific                                  -              குறிப்பானதாக

M        -           Measurable                          -           அளவிடக் கூடியதாக

A         -           Achievable                           -           அடையக் கூடியதாக

R          -           Realistic, Relevant              -           நிஜத்தன்மையுடையதாக,        
                                                                                        சம்பந்தமான

T          -           Time bound                         -           கால வரையரையடையதாக

ஒரு சின்ன உதாரணம் இருந்தா உங்களுக்கு சுலபமா புரிஞ்சுடும். பார்க்கலாமா ?

இப்போ உங்க நண்பரோட குறிக்கோளைப் பார்க்கலாம்.

இந்த டிகிரியை முடிச்சாப் போதுங்க. எங்கப்பா பாடுற ராமாயணத்திலேயிருந்து தப்பிச்சுடுவேன்.

எப்பிடி ? வருஷத்தை மட்டும் முடிச்சாப் போதுமா ? இல்லை பாஸ் பண்ணணுமா ? குறிப்பாச் சொல்லுங்க பாஸ்.

ஒரு அஞ்சு வருஷம் டைம் எடுத்துக்கலாமா ? அப்பா என்ன சொல்லுவார் ?

இப்பிடி சொல்லிப் பாருங்க.

எப்பிடியோ . . . நாலு வருஷத்துக்குள்ள இந்த டிகிரிய 70 சதவீதத்துக்கு மேல மார்க் வாங்கி பாஸ் பண்ணிடணும்டா.

இது ஸ்மார்ட் குறிக்கோள்தானா என்று பார்க்கலாமா ?

குறிப்பானதா ?                          -     பாஸ் வேண்டும் என்பது குறிப்பானதுதான்

அளவிடக் கூடியதா ?            -    70 சதவீதம்தான் அளவீடு

அடையக் கூடியதா ?             -    எத்தனையோ பேர் அடைந்த குறிக்கோள்தான்

நிஜத்தன்மையுடையதா ?    -    நிச்சயமாக நிஜத்தன்மையுடையதே

கால வரையரையடையதா ?    -    நான்கு ஆண்டுகள் என்பதுதான் கால வரையறை

இன்னும் சில உதாரணங்களைப் பார்க்கலாம். அதெல்லாம் ஸ்மார்ட்தானா என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். நோ கமாண்ட்ஸ்.

2015 வது வருஷக் கடைசிக்குள்ள சென்னைல ஒரு டபுள் பெட்ரும் பிளாட் ஒன்னு வாங்கிடணும்.

நேரங்காலமில்லாம ஓடற வேலை. சம்பளமும் அப்பிடி ஒண்ணும் பிரமாதமில்லே. 2015 மார்ச் முடியறதுக்குள்ள சாயங்காலம் 6 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பற மாதிரி ஒரு நாப்பதாயிரம் கையிலே வராப்பில ஒரு வேலை ரெடி பண்ணிரணும்.

இன்னைக்கு ஆகஸ்டு 30ம் தேதி. அடுத்த வருஷம் இதே ஆகஸ்டு 30ம் தேதி, அந்த ஆளு வாயாலயே நான்தான் உங்கப்பான்னு ஊரறிய, நாடறிய  சொல்ல வைக்கிறேன்.

வர்ற 2016 ம் வருஷம் எங்க கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்.

யாரு சார் செவ்வாய் கிரகத்துக்கு டிக்கட் கேட்டது ? உங்க குறிக்கோள்லே கால வரையரையே  இருந்தாக் கூட இப்போதைக்கு சாத்தியப் படாத ஒன்று.

பார்க்கலாம். இப்போதானே மங்கள்யான் போய்ச் சேர்ந்திருக்கு.

அப்புறமா ஒரு காலத்துல மாநகர ராக்கெட், அதிவேக சொகுசு ராக்கெட், இடைநில்லா ராக்கெட், குளிர் சாதன ராக்கெட் எல்லாம் விடுவாங்க. நிலாலே ஒரு 10 நிமிஷம் நிக்கும். மசால்வடை, டீ எல்லாம் சாப்பிட்டுட்டு சந்தோசமா செவ்வாய் கிரகத்துக்குப் போயிட்டு வாங்க. சரிதானே ?

அப்போ நம்ம எல்லாரும் குறிக்கோள், அதை எப்பிடி வரையறை பண்றதுன்னு ஒரு மாதிரியா தெரிஞ்சுக்கிட்டோம்.

குறிக்கோளை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்

1.    குறுகிய காலக்குறிக்கோள்    - கால வரையறை குறுகியதாக இருக்கும். சட்டுன்னு முடிச்சுட்டு அடுத்த குறிக்கோளை பாக்கப் போகலாம்.

2.    நீண்ட காலக் குறிக்கோள்    - கால வரையறை கொஞ்சம் நீண்டதாக இருக்கும். பெரும்பாலும் அதிக திட்டமிடுதலும் முயற்சியும் தேவைப்படும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். குறிக்கோளை இடையிலே மாத்துறதெல்லாம் கூடாதுங்க.

ஒருவேளை அப்பிடி தோணிச்சுன்னா அந்தக் குறிக்கோளை அடைய நீங்க தவறிட்டதாத்தான் எடுத்துக்கணும்.

பரவாயில்லே விடுங்க. வேறே நல்லதா அடைய முடிஞ்சதா ஸ்மார்ட் குறிக்கோளாப் பாத்து ஆரம்பிக்கலாம்.

கடைசியா ஒரு ஸ்லோகன்.

==============================================================

குறிக்கோள்னு ஒண்ணு வச்சுக்கிறதும் அதை அடையறதுக்காக பலப்பல முயற்சிகள் எடுக்கறதும் பெரிய ரிஸ்க்கா இருக்கும் போலிருக்கே என்பவர்களுக்கு . . .

குறிக்கோளே இல்லாம காலத்தைக் கடத்தறது அதைவிட ரிஸ்க்கானது.
வாழ்க்கைல பல வருஷ காலம் உபயோகமா எதுவுமே செய்யாம வீணாத் தொலைஞ்சு போகும்.


==============================================================

(இன்னும் வரும்)