Falls

Falls
5 Falls

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

பயணிகள் கவனிக்க . . .

நான் உட்கார்ந்திருந்த இருக்கை கொஞ்சம் சிறியது. அத்தோடு முன்னிருக்கைக்குக் கீழே ஏதோ ஒரு பெட்டியை வைத்திருந்தார்கள். கருவிப் பெட்டி போலும். காலை வைப்பதற்கே சிரமமாக இருந்தது.

லேசாகக் காலை மடக்கி என்னுடைய இருக்கைக்குக் கீழேயே வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். காலில் ஏதோ தட்டுப் பட்டது.திரும்பிப் பின் இருக்கையைப் பார்த்தேன்.

அந்த இளைஞன் லேசாகச் சிரித்தான்.

நாள் அவனை முறைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டேன். காலை நகர்த்தி முன்னால் வைத்துக் கொண்டேன்.

ராஸ்கல். பொண்ணோட காலை நிமிண்டுறதும் கையைப் பிடிக்கிறதுமே இவனுங்க வேலையாப் போச்சு. சே.

பஸ் மெதுவாக சேலத்தை விட்டு வெளியே வந்து சென்னையை நோக்கி வேகமெடுத்தது.

கண்டக்டர் ஒரு பழைய மோகன் படத்தைப் போட்டுவிட்டு டிக்கட் கொடுக்கத் தொடங்கினார்.

எனக்கு மோகன் படங்கள் மிகப் பிடிக்கும். படத்தில் லயிக்கத் தொடங்கினேன்.

காலை மடக்கும் போதெல்லாம் அவனுடைய கால் என் காலில் தட்டுப் பட்டது.

திரும்பிப் பின் இருக்கையைப் பார்த்தேன். அந்த இளைஞன் மீண்டும் லேசாகச் சிரித்தான்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது.

சட்டென்று எழுந்தேன். அவனுடைய சட்டையைப் பற்றி உலுக்கினேன்.

பளாரேன அவன் கன்னத்தில் அறைந்தேன்.

ராஸ்கல். காலை ஒழுங்கா வச்சு ஒக்கார முடியாதோ.

அவன் பொறி கலங்கி விட்டான் கண்கள் கலங்க சாரி சொன்னான்.

சாரியாம் சாரி. இவனுங்களையெல்லாம் கட்டி வச்சு ஒதைக்க ஆளில்லாமப் போச்சு.

பஸ்ஸில் ஆளாளுக்கு திட்டத் தொடங்கினார்கள். அவன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

கண்களில் இன்னும் கண்ணீர்.

இதையெல்லாம கவனிக்காத கண்டக்டர் பின் வரிசைகளில் டிக்கட் போடுவதில் மும்முரமாக இருந்தார்.

நான் மௌனமாக சன்னல் வழியாக வெளியே வெறுமையாகப் பார்க்கத் தொடங்கினேன்.

சே... படம் பார்க்கும் மனநிலையே போச்சு.

நான் காலைப் பின்னுக்கு நகர்த்த இன்னும் அங்கே அவனுடைய வழவழப்பான கால்கள்.

சே... திருந்தாத ஜென்மம்.

நான் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு முன்னால் திரும்பிய போது பஸ் வாழப்பாடி ஸ்டாப்பில் நின்றது.

முன் வாசல் வழியாக ஒரு பெரியவர் ஏறினார்

என்னப்பா, வழியிலே ஒரு அசௌகரியமும் இல்லையே - என்று கேட்டபடியே என்னுடைய இருக்கைக்கு அடியில் இருந்து இரண்டு காலிப்பர்களை எடுத்தார்.

பின் இருக்கை இளைஞன் இப்போதும் லேசாகச் சிரித்தபடி அந்த இரும்பாலாபன ஊன்று கோல்களின் உதவியோடு எழுந்தான்.

நான் அதிர்ந்து போனேன்.

அந்த இளைஞன் என்னைப் பார்த்து சிரித்தபடி டக் .. டக்.. என்ற ஓசையெழ இறங்கிப் போனான்.

கம்பிக்கும் காலுக்கும் வித்தியாசத்தை உணராமல் வீணாக ஒரு இளைஞனைக் காயப் படுத்தி . . .

சே. . .என்னுடைய அவசரம் என்னையே வெட்கப் பட வைத்தது.

இப்போதும் மனம் மோகன் படத்தில் லயிக்க வில்லை.