Falls

Falls
5 Falls

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழில் லீன் தத்துவம் - ஓர் அறிமுகம் - 1

லீன் (மெலிவு) அப்பிடின்னா என்ன ?

தெரிஞ்ச ஒரு விஷயத்திலே இருந்து ஆரம்பிக்கலாம்.

அதிகாலை நேரம். நகரின் பரபரப்பு இன்னும் தொடங்கலை பாருங்க. கடற்கரைக்குப் போய் கொஞ்சம் உலவிட்டு வரலாமா ? வாங்க.

அடேயப்பா . . . . .

இத்தனை பேர் இந்த நேரத்துல இங்கே என்ன பண்ணிட்டிருக்காங்க ? ஓடிக் கிட்டிருக்காங்க கொஞ்சம் வேகமாக நடை. உடம்பு இளைப்பதற்குத்தானே ?

ஏன் உடம்பு இளைக்கணும் ? இருந்துட்டுப் போகட்டுமே. தொப்பைதானே சில பேருக்கு அழகு. இப்பிடி அதிகாலைத் தூக்கத்தைக் கெடுத்து உடலையும் வருத்தணுமா ?

கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்க. தேவையில்லாத தசைகளால என்ன இடைஞ்சல் ?

இந்த எக்ஸ்ட்ரா தசைகளுக்கெல்லாம் இரத்தம் சப்ளை செய்யணுமே. அதனால இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியதிருக்கும்.

இந்தத் தசைகளுக்கும் ஆக்ஸிஜன் தேவை. அதிகமா ஆக்ஸிஜன் சப்ளை செய்யறதுக்காக நுரையீரலும் அதிகப்படியான காற்றை சுத்திகரிச்சாகணும்.

இந்தத் தசைகள் இரத்தத்தில வெளியிடும் கழிவுகளை அப்புறப் படுத்த கிட்னியும் தோலின் வியர்வைச் சுரப்பிகளும் மெனக்கிட வேண்டும்.

இவையெல்லாம் போதாதுன்னு நாம சாப்பிடற சாப்பாட்டுலயிருந்து வேறு இந்த உதவாக்கரை தசைகளுக்கு தண்டமா பங்கு அழ வேண்டியதிருக்கும்.

எல்லாத்துக்கும் மேலே . . .  எங்கே போனாலும் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும். நம்ம  கால்களுக்கு வேறே தேவையில்லாத சுமை.

சரி. இத்தனை உறுப்புகளைக் கஷ்டப் படுத்தி நாம் பத்திரமாக வைத்திருக்கும் அளவுக்கு இந்தத் தசைகளால் நம் உடலுக்கு அப்படி என்ன பயன் என்று பார்த்தால், எதுவும் இல்லை.

அப்புறம் என்ன? செய்ய வேண்டியதைச் செஞ்சு இந்தத் தேவையில்லாத தசைகளைக் குறைக்கலாமே ?

நாம சாப்பிடுற சாப்பாட்டுல உள்ள சத்துப் பொருட்களும் உடம்பில உருப்படியா வேலை செய்யற உழைப்பாளி உறுப்புகளுக்கு கிடைக்கும். 

நம்மோட மற்ற உறுப்புகளோட வேலைப் பழுவும் குறையும். இன்னோரு வகையில சொன்னா நாமும் குறைவாகச் சாப்பிட்டாலே போதும். செலவும் மிச்சம்.

சரி. இதற்கும் நிறுவனங்களிலேயும் தொழிற்சாலைகளிலேயும் தரக்கட்டுப்பாடு அப்பிடின்னு சொல்ற லீன் வகைகளுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு.

தொழிற்சாலைகளிலும் தேவையில்லாத, உற்பத்திக்குப் பயன்படாத பொருட்கள், வேலைகள் (சில மனிதர்களும்) இருக்கலாம். கண்டிப்பாக அவையெல்லாம் நம்முடைய நேரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கூட நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ வருமானத்திற்கோ உதவி செய்யாமல் இருக்கலாம். இப்படியான விஷயங்கள்  பலவகைகளில் தொந்தரவாகக் கூட இருக்கும்.

அதையெல்லாம் கண்டு பிடிச்சு சில பல பயிற்சிகளைச் செஞ்சு நிர்வாகத்தை ஸ்லிம்மாக மாத்தலாம். நிர்வாகமும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். நம்மோட உழைப்பு, நேரம், பணம் எல்லாம் உற்பத்திப் பொருளாகவும் சேவையாகவும் நிறுவனத்தோட வளர்ச்சிக்கு நேரடியாகப் பயன் தரக் கூடியதாவோ இருக்கும்.

நிறுவனங்கள்லே மட்டுமில்ல. நம்ம வீட்டிலும் கூட இப்பிடி சில பொருட்களோ நடவடிக்கைகளோ இருக்கலாம். அதையும் கண்டு பிடிச்சு தேவையான செலவுகளை மட்டும் செய்து நம்ம வீட்டையும் கூட நாம மெலிதாக்கலாமே.

வாருங்கள். நாமும் நடக்கலாம். ஓடலாம்.

நம்முடைய நிறுவனத்தையும் வீட்டையும் மெலிய வைக்கலாம்.

மெலியலாம்.

கருத்துகள் இல்லை: